கிராம மக்கள் போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வெயிலு கந்தபுரம் கிராம மக்கள், தேசிய விவசாய சங்க மாநிலதலைவர் ரெங்க நாயகலு தலைமையில் ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி முன்னிலையில் நேற்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமரெட்டியாபுரம் ஊராட்சியை சேர்ந்த வெயிலுகந்தபுரம் முதல் சங்கரலிங்கபுரம் விலக்கு வரை உள்ள வண்டிப் பாதையில் தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மெட்டல் சாலை அமைக்க ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் சாலை அமைக்கும் விதிகளுக்கு முரணாக நடந்து வருகிறது. எனவே, கரிசல் மண் கொண்டு அமைக்கப்படும் சாலைப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, செம்மண், சாலை விதிகளின்படி சரள் மண் கலவை கொண்டு சாலையை உயர்த்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு சென்று வர உள்ள இடையூறுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.