தரிசு நிலத்துக்கு பட்டா வழங்கவேண்டும்கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

தரிசு நிலத்துக்கு பட்டா வழங்கவேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-04-13 18:45 GMT

சங்கராபுரம் தாலுகா வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கல்வராயன்மலை ஒன்றியகுழு துணை தலைவர் ஜாகிர்உசேன் மற்றும் வனக்குழு தலைவர் வடிவேல் ஆகியோர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- வடபாலப்பட்டு கிராம எல்லை பகுதியில் உள்ள புஞ்சை தரிசு நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கிணறு வெட்டி, ஆயில் என்ஜின் மூலம் தலைமுறை தலைமுறையாக கரும்பு, மரவள்ளி, மஞ்சள், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். மேலும் அங்கேயே வீடு கட்டி குடியிருந்து வருவதால், பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் தற்போது காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் நாங்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை கையகப்படுத்துவதற்காக அளவீடு செய்ய போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே இந்த நிலத்தை எடுத்துக் கொண்டால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே நிலம் கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாய செய்து வரும் புஞ்சை தரிசு நிலதிற்கு பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்