விபத்துகளை தடுக்கக்கோரி கொட்டும் மழையில் கிராம மக்கள் மறியல்
விபத்துகளை தடுக்கக்கோரி கொட்டும் மழையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விபத்து
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் முத்துசாமி நேற்று இரவு ஒரு சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், முத்துசாமிக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குரும்பலூர்பாளையம் கிராம மக்கள் நேற்று இரவு கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, விபத்து நடந்த இடம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து செல்பவர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூர், நக்கசேலம் உள்பட சில பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு கடந்த சிலமாதம் முன்பு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இதனால் இலகுரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் அதிவேகமாக சென்றுவருவதால், பாளையம் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
எனவே விபத்துகளை தடுக்க அப்பகுதியில் தடுப்புக்கம்பிகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மறியலால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து, கலைந்து போகச்செய்தனர். இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.