சாலையோர தடுப்பு சுவரை அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு: சாலையோர தடுப்பு சுவரை அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு கோா்ட்டு உத்தரவை நிறைவேற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே அர்ஜுனன் என்பவர் சாலையின் ஓரத்தில் தனக்கு சொந்தமான பட்டா இடத்தில் 6 கடைகளுடன் கட்டிடம் கட்டியுள்ளார். இந்த கடையின் முன்புறம் உள்ள சாலைக்கும், வாய்க்காலுக்கும் இடையே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு சுவர் கட்டியதால் கடைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவற்றை அகற்றக்கோரி கடை உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தடுப்புசுவரை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தாசில்தார் சத்திநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று விளம்பார் கிராமத்துக்கு வந்தனர். இதையறிந்த அப்பகுதி தடுப்பு சுவற்றை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஊருக்கு செல்லும் சாலையில் அமர்ந்து தீ்டீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படாததால் தடுப்பு சுவற்றை அகற்றாமல் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.