செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பிரம்மதேசம் அருகே செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

பிரம்மதேசம்:

பிரம்மதேசம் அருகே உள்ள தலைக்காணிக்குப்பம் கிராமத்தில் 13 ஏக்கரில் தரிசு நிலம் உள்ளது. இந்த தரிசு நிலத்தில் செம்மண் குவாரி அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனை குத்தகைதாரர்கள் செம்மண் குவாரிக்காக முதல்கட்ட பணியை தொடங்கினர். இதற்கு தலைக்காணிக்குப்பம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குத்தகைதாரர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அன்பரசு முன்னிலை வகித்தார். இதில் கிராம மக்கள் மற்றும் குத்தகைதாரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராம மக்கள் கூறுகையில், செம்மண் குவாரி அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். விவசாயமும் பாதிக்கப்படு்ம். எனவே செம்மண் குவாரி அமைக்கக்கூடாது என்றனர்.

போராட்டம் நடத்துவோம்

இதற்கு குத்தகைதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்து கூறுகையில், டெண்டர் எடுத்து பல மாதங்கள் கடந்து விட்டது. எனவே முதற்கட்ட பணியை தொடங்குவோம் என்றனர்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்ட போலீசார், செம்மண் குவாரி அமைப்பது சம்பந்தமாக கோட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம் நடத்துவது என்றும், அதுவரை செம்மண் குவாரி குத்தகைதாரர்கள் பணியை தொடங்க கூடாது எனவும் தெரிவித்தனர். அதையும் மீறி பணியை தொடங்கினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு கிராம மக்கள் சென்றனர். இதன் மூலம் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்