தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-25 20:09 GMT

தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை விமானப்படை நிலையம்

தஞ்சை விமானப்படை நிலையத்திற்கு அருகே இனாத்துக்கான்பட்டி கிராமம் அமைந்துள்ளது. விமானப்படை நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக விளைநிலங்களை விமானப்படை நிலையம் கையகப்படுத்தியது.

இந்த கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஊருக்குள் சென்று, வர புதுக்கோட்டை சாலையில் இருந்த 10 அடி அகலமுள்ள தார்சாலையை பயன்படுத்தி வந்தனர். சாலையை மட்டும் பயன்படுத்த விமானப்படையினர் அனுமதி வழங்கினர்.

10 கி.மீ. தூரம் சுற்றி வரும் நிலை

இந்த நிலையில் அந்த சாலையில் ஊரின் நுழைவுப்பகுதியில் விமானப்படையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கேட் அமைத்து திறந்து மூடும் அளவுக்கு செய்திருந்தனர். இதனால் கிராம மக்கள் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக சென்று வருகின்றனர்.

புதுக்கோட்டை சாலைக்கு வர 2 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து நகருக்குள் வந்த இந்த கிராம மக்கள், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இரும்புகேட்டை அகற்றி சுவர் அமைக்க எதிர்ப்பு

கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் விமானப்படை நிலையம் சார்பில் இரும்பு கேட்டை மூடி யாரையும் அங்குள்ள சாலை வழியாக கடக்க அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை விமானப்படை நிலையம் சார்பில் இரும்பு கதவை எடுத்துவிட்டு அங்கு நிரந்தரமாக சுற்றுச்சுவர் எழுப்ப பொக்லின் எந்திரங்களை கொண்டு அதற்கான பணிகளை தொடங்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறும் இடத்தில் திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் என பலரும் அங்கு குவிக்கப்பட்டனர். அதேபோல் விமானப்படை வீரர்களும் அங்கு துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உரிமை பறிபோய் விட்டது

அப்போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அங்கு திரண்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கு கிராம மக்கள், "நாங்கள் பல தலைமுறையாக இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது கிராம மக்கள் தஞ்சைக்கு சென்று, வர காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையை விமானப்படை நிலையம் சார்பில் எடுத்துக்கொண்டனர்.

முன்பு இரும்புகேட் கொண்டு சாலையை மூடி வைத்தனர். பகல் நேரங்களில் மட்டும் செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கினர். தற்போது இரும்பு கேட் பொருத்தப்பட்ட 40 அடி இடத்தை அகற்றிவிட்டு அங்கு நிரந்தரமாக சுற்றுச்சுவர் எழுப்புகின்றனர். இந்த சாலையை விமானப்படை நிலையத்தினர் நிரந்தரமாக மூடியதால் எங்களுக்கு இந்த பகுதியில் இருந்த உரிமையும் பறி போய்விட்டது.

புதிய கிராமம் ஏற்படுத்த வேண்டும்

எங்களது விளை நிலங்களை விமானப்படை நிலையத்தினர் கொஞ்சம், கொஞ்சமாக கையகப்படுத்தி விட்டனர். தற்போது மக்கள் வசிக்கும் இந்த இடம் தான் எஞ்சி உள்ளது.இந்த ஊரை விமானப்படை நிலையத்தினர் கையகப்படுத்தப்போவதாக கூறி கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசு சார்பில் செய்து தரவில்லை.இருக்கும் வசதியை கொண்டே நாங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு நிரந்தரமாக ஒவ்வொருவருக்கும் தலா 6 சென்ட் இடம் அரசு சார்பில் வழங்கி அதில் குடியிருப்புகளை அமைத்து, புதிய கிராமத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்