சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்த கிராமமக்கள்
அரும்பராம்பட்டில் சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்த கிராமமக்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்;
மூங்கில்துறைப்பட்டு
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரும்பராம்பட்டு கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் கடந்த மாதம் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சிமெண்டு சாலையை ஆய்வு செய்தனர். பின்னர் ஓரிரு நாட்களில் தரமான சாலை அமைக்கப்படும் என்று கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் சாலை தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சிலர் மண்வெட்டியால் சிமெண்டு சாலையை பெயர்த்து எடுத்தனர். மேலும் இதை வீடியோகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.