கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மேலப்பாட்டம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
உயர் சிகிச்சை
பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். தொழிலாளி. இவர் தனது மனைவி, மகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள் நல்லத்தாய் என்பவர் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை எனக்கூறிய நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். அதன்பின்னர் எனது மகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
ஜூன் மாதம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர். சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே நல்லத்தாய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் முன்பரிசோதனை செய்யாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிங்கிகுளத்தை சேர்ந்த ஞானமணி என்பவர் தனது குடும்பத்துடன் வந்து, "பணி நீக்கம் செய்யப்பட்ட தனக்கு மீண்டும் கருணை அடிப்படையில் கிராம நிர்வாக உதவியாளர் பணி வழங்க வேண்டும்" என்று மனு கொடுத்தார்.
கருப்பந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் கொடுத்த மனுவில், "ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்ய முதியவரை அழைத்து சென்ற என்னை வரக்கூடாது என்று கூறிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.