கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியந்தல் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்காலை அடைத்து, அதனை மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதன்படி எங்கள் பகுதியில் உள்ள வாய்க்காலை அடைத்தனர். ஆனால் அதிகாரிகள் கூறியபடி மாற்றுவழி ஏற்படுத்தவில்லை.
இதனால் எங்கள் பகுதியில் கழிவுநீர் செல்லவழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்று கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.