விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்பு தொிவித்துகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை :நுழைவு வாயிலை போலீசார் இழுத்து மூடியதால் பரபரப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் நுழைவு வாயிலை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-14 18:45 GMT


கள்ளக்குறிச்சி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு, கடந்த 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு அனுமதியின்றி எவ்வாறு இங்கு கொடி கம்பம் நடலாம் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தொிவித்தனர்.

அதேபோன்று, தற்போது அனைவரும் கிராமத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், இந்த கொடிக்கம்பம் அமைத்ததன் மூலம் கிராமத்தில் தேவையின்றி இரு பிரிவினரிடையே மோதல் உருவாகும். எனவே இதை அகற்ற வேண்டும் என்று வருவாய் துறை, காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். ஆனால் கொடிக்கம்பம் அகற்றப்படவில்லை.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் ராஜலட்சுமி கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அங்கு தாசில்தார் ராஜலட்சுமி யிடம் தலைமையில் கிராம மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினரிடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாததால் உடனடியாக அந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை மூடி, அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாா் மற்றும் கிராம மக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். அதன்பேரில், அவர்கள் கலெக்டர் ஷ்ரவன் குமாரை நோில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அகற்றக்கூடாது என்று கோரிக்கை

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என்று கூறி கோரிக்கையை தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். கொடிக்கம்பத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருதரப்பினரும் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்