தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராமமக்கள், தங்களது விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-22 21:43 GMT

தஞ்சாவூர்;

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராமமக்கள், தங்களது விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

தஞ்சை மாவட்டம் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இது குறித்து குறுஞ்செய்தியும் வரவில்லை. இதனால் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தஞ்சை தாலுகா அலுவலகத்துக்்கு வந்தனர்.அங்கு செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்திற்கு சென்று எங்களது விண்ணப்பங்கள் எதற்காக நிராகரிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். அந்த பெண்களின் குடும்ப அட்டை எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து பார்த்தபோது இவர்கள் பெயரில் விண்ணப்பங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. உங்களது பெயரில் விண்ணப்பங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்ற விவரத்தை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அனைவரும் தாங்கள் விண்ணப்பம் அளித்ததற்காக வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை காண்பித்தனர்.

ஒப்புகை சீட்டு

அதில் சிலவற்றில் பயனாளிகள் பெயர்களும், சிலவற்றில் குடும்ப அட்டை எண்ணும், பலவற்றில் யாருடைய பெயரும், குடும்ப அட்டை எண்ணும் குறிப்பிடப்படாமல் இருந்தது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டின் பின்புறம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.மேலும் அவர்கள், நீங்கள் இங்கிருந்து உங்கள் ஊருக்கு செல்லுங்கள். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எங்களது விண்ணப்பங்களின் நிலை என்ன? என்பதை அறியாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என அந்த பெண்கள் உறுதியுடன் அங்கேயே அமர்ந்துவிட்டனர்.

பெண்கள் அதிர்ச்சி

இதையடுத்து சென்னம்பட்டி கிராமங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் எங்கே இருக்கிறது என பார்த்தபோது ஒரு கட்டாக கட்டப்பட்டு விண்ணப்பங்கள் இருந்தன. அவற்றை எடுத்து வந்த அதிகாரிகள், குறிப்பிட்ட சில பெண்களை மட்டும் அழைத்து இந்த விண்ணப்பங்களில் உங்களது பெயர் இருக்கிறதா? என பார்த்தபோது அந்த விண்ணப்பங்கள் எல்லாம் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்தவை என்பது தெரியவந்தது.மேலும் இந்த விண்ணப்பங்கள் எல்லாம் கணினியில் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவலை அறிந்து பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தகுதியானவர்களுக்கு இன்னும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குள் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதிலை கேட்டு என்ன செய்வது என தெரியாமல் பெண்கள் தங்கள் கிராமத்துக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்