பதாகைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பதாைககளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-06-19 17:51 GMT

கும்பாபிஷேகம்

ஆலங்குடி அருகே மேலப்பட்டி, எம்.ராசியமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தி விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆலங்குடி-கறம்பக்குடி சாலை மற்றும் எம்.ராசியமங்கலம் நெடுகிலும் பதாகைகளை அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பல்ேவறு அமைப்பினர் கிராமமக்கள் சார்பில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல்

இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பதாகைகளை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் பதாகைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரி ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும் சமாதான கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆனைமுடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து கிராமமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் பதாகைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்