மயிலம் அருகே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்:ஊராட்சி மன்ற தலைவரை கிராமமக்கள் முற்றுகை

மயிலம் அ ருகே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-08-26 18:45 GMT


மயிலம், 

மயிலம் அருகே உள்ளது சின்ன நெற்குணம் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு ஆகியன மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில், தற்போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீரின்றி போனதால், கிணறு மூலமாக மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, இதற்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் நீரில், பன்றிகள் அட்டகாசம் செய்கின்றன. இதனால் அசுத்தமான நீர் குடிநீர் குழாயில் கலந்து விடுகிறது. இதன் மூலம் மக்களுக்கு நோய்கள் பரவி வருகிறது என்பது இப்பகுதியினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

முற்றுகை

இதுபற்றி அப்பகுதி மக்கள் சிவக்குமார் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்படி, பிரச்சினைக்குரிய இடத்தை அவர் நேரில் சென்று பார்வையிடுவதற்காக நேற்று வந்தார். அப்போது, அவருடன் ஊராட்சிமன்ற தலைவர் கைலாஸ் வந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் கைலாசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் வேண்டும், பிள்ளையார் கோவில்தெரு, ரெட்டியார் தெருவுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை, ஊராட்சி பகுதிக்கு நீங்கள் வருவதில்லை என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதை பார்த்த சிவக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களை சமாதானம் செய்தார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கைலாசிடம் குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதேபோன்று, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதுடன், அவர்களது அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதன்பின்னர் சிவக்குமார் எம்.எல்.ஏ. குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் தேங்கிநிற்கும் இடத்தை பார்வையிட்டார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதாஸ், பா.ம.க. நிர்வாகிகள் தேசிங்கு, சக்திவேல், பாபு, சேட்டு, முத்துகிருஷ்ணன், பெருமாள், ஹரி சிவா, தன்ராஜ், முருகன், தனசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்