குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2023-08-04 18:45 GMT

கோட்டூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர்

கோட்டூர் அருகே குமட்டித்திடல் ஊராட்சியை சேர்ந்த புத்தகரம், காரைத்திடல் ஆகிய கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள எடையூர் சங்கேந்தியில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் நொச்சியூர் சமத்துவபுரத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது.

இங்குள்ள குடிநீர் தொட்டியில் இருந்து புத்தகரம் மற்றும் 22 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது . புத்தகரம் மற்றும் காரைத்திடல் ஆகிய 2 கிராமங்களிலும் சுமார் 400 குடும்பங்கள் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்தனர்.

சாலைமறியல்

கடந்த சில ஆண்டுகளாகவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் காரைத்திடல் மற்றும் புத்தகரம் கிராமங்களுக்கு சரியாக வரவில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆண்கள் இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புத்தகரம் கிராம மக்கள் நேற்று குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் குமட்டித்திடல் ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தினமும் போதுமான அளவு குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும்

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம் கூறுகையில், குமட்டித்திடல் ஊராட்சியை சேர்ந்த கிராமங்களுக்கு தினமும் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக போதுமான குடிநீர் வழங்கப்படாதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிதியிலிருந்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கும் உரிய வரி செலுத்தப்படுகிறது. ஆனாலும் 10 முதல் 15 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்குவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி உள்ளோம். அனைவருக்கும் தேவையான அளவு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்