குடிநீரை மாசுபடுத்துவதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

மேகமலை அருவியின் மேல் பகுதியில் உள்ள தொட்டியில் இறங்கி சுற்றுலா பயணிகள் குடிநீரை மாசுபடுத்துவதை கண்டித்து கோம்பைதொழு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-01 21:00 GMT

மேகமலை அருவியின் மேல் பகுதியில் உள்ள தொட்டியில் இறங்கி சுற்றுலா பயணிகள் குடிநீரை மாசுபடுத்துவதை கண்டித்து கோம்பைதொழு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கிராம மக்கள் போராட்டம்

கோம்பைத்தொழு அருகே சின்னசுருளி என்று அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவியின் மேல் பகுதியில் தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் மேகமலை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் மேல் பகுதிக்கு சென்று குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் குளித்து நீரை மாசுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதிக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை மேகமலை அருவிக்கு செல்லும் பாதையில் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் கயிற்றை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் கோம்பைத்தொழு கிராமத்திற்கு சென்று போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுற்றுலா பயணிகள்

அப்போது அருவியில் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் வனத்துறையினர் சோதனை சாவடியில் அமர்ந்து சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் வேலைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். அருவியில் ரோந்து பணியில் ஈடுபடுவது கிடையாது. இதனால் சுற்றுலா பயணிகளால் மாசுபடுத்தப்பட்ட குடிநீரை கிராம மக்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதிக்கு செல்வதை தடுக்க வேண்டும். அதேபோல் சுற்றுலா பயணிகளும் அருவியின் மேல் பகுதிக்கு ெசல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்