கிராம சபை புறக்கணிப்பு கூட்டம்
சயனபுரம் ஊராட்சியில் கிராம சபை புறக்கணிப்பு கூட்டம் நடைபெற்றது.
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பவானி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சிபணிகளும் நடைபெறவில்லையென்றும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம சபை கூட்டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்தனர்.
பின்பு கிராம சபை புறக்கணிப்பு கூட்ட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கிராம சபை புறக்கணிப்பு கூட்டத்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.