கிராம நிர்வாக அலுவலர் கொலை:சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு

கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக, மற்றொரு பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசி இருப்பதாவது:-

லூர்து பிரான்சிஸ் ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது சிலரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு மாறுதல் கேட்டார். இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் நேரில் தெரிவித்தோம். அப்போது தூத்துக்குடி தாலுகாவில் காலியிடம் இல்லாததால் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு போகிறீர்களா? என கலெக்டர் கேட்டார்.

ஆனால், லூர்து பிரான்சில் மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து தூத்துக்குடியில் 2 இடங்கள் காலியானது. அதில் அவரை நியமித்திருக்கலாம். இது தொடர்பாக சங்கத்தினர் கலெக்டரிடம் தெரிவித்து இருந்தால் நிச்சயமாக நியமித்து இருப்பார். அப்போது லூர்து பிரான்சிஸை தூத்துக்குடி தாலுகாவுக்கு மாற்றி இருந்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டார்.

இவ்வாறு அதில் பேசப்பட்டு உள்ளது.

இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-----------

Tags:    

மேலும் செய்திகள்