அடிப்படை வசதிகள் இல்லாத கிராம நிர்வாக அலுவலகம்
திருக்கடையூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று கட்டிடத்தில்...
செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கடையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி திருக்கடையூர், சிங்கனோடை, சீவக சிந்தாமணி, சரபோஜி ராஜபுரம், ஓடக்கரை, அபிஷேக கட்டளை, பிச்ச கட்டளை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கியதாகும். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருக்கடையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக மாற்று கட்டிடமான மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் அருகில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
அடிப்படை வசதிகள்
இதனால் மது பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை ஆங்காங்கே போட்டும், உடைத்தும் செல்கின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மாற்று கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை மாற்றி, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.