விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனைமூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-02-17 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள் மாயம், பெண்களுக்கு பாலியல் கொடுமை என்கிற அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, 33 பெண்கள் உள்பட 143 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வெவ்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 44 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிரடி சோதனை

இச்சம்பவம் தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜிமோன் மற்றும் பணியாளர்கள் 6 பேர் என 9 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இந்த ஆசிரமத்தை மூடி சீல் வைக்கும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் அதிரடி சோதனை செய்தனர்.

ஆவணங்கள் பறிமுதல்

அப்போது ஆசிரமத்தின் ஒவ்வொரு அறையையும் தீவிரமாக சோதனை செய்ததில் அங்கு ஏராளமான மருந்துகள், மாத்திரைகள் இருந்தது. உடனே இதுபற்றி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை முதுநிலை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா, சுகன்யா ஆகியோர் அங்கு விரைந்து வந்து ஆசிரமத்திலிருந்த மருந்துகளின் பயன்பாடு என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து பட்டியலிட்டனர்.

3 மணி நேரம் நடந்த இந்த சோதனையின்போது ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் ஆகிய இருவரின் பாஸ்போர்ட் மற்றும் 10 செல்போன்கள், 1 லேப்டாப், 1 கம்ப்யூட்டர், மருந்து, மாத்திரைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை பறிமுதல் செய்து அதனை மூட்டை, மூட்டையாக கட்டி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மட்டும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற பொருட்கள் அனைத்தும் கெடார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை கட்டுப்பாட்டில்...

இந்த சோதனை முடிந்த பின்னர் அந்த ஆசிரமத்தின் கதவுகளை வருவாய்த்துறையினர் பூட்டுப்போட்டு பூட்டி சாவியை கெடார் போலீசில் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் அந்த ஆசிரமம் தற்போது முழுக்க, முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த ஆசிரமத்தில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேவைப்பட்டால் மேற்கொண்டு சோதனை நடத்தப்படும் என்பதால், தற்போது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற வாய்ப்பு

இதற்கிடையே இந்த ஆசிரம வழக்குகளை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில போலீசாரின் விசாரணை தொடர்புடையதாக உள்ளது. எனவே இந்த வழக்கு விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்