பஸ்சை வழிமறித்து நடனமாடி சமூகவலைதளத்தில் வீடியோ: மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர்செய்யும் நூதன தண்டனை

பஸ்சை வழிமறித்து நடனமாடி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர்செய்யும் நூதன தண்டனை விதித்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Update: 2022-11-04 10:47 GMT

நடனமாடும் வீடியோ

சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பஸ் நிலையம் அருகே சூரிய நாராயணன் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிக்கு ெசன்ற மாநகர பஸ்சை(தடம் எண் 101) வழி மறித்து 2 வாலிபர்கள் நடனமாடியபடி வீடியோ எடுத்து, அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ வைரலானது. இது குறித்து பலரும் கண்டன பதிவுகள் வெளியிட்டனர். இது பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லையா? என போலீசாருக்கு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

நூதன தண்டனை

இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அந்த வீடியோ பதிவை வைத்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான வருண் (19) மற்றும் ஹரீஷ் (20) ஆகிய 3 பேரையும் பிடித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர். அவர், 3 பேருக்கும் தலா ரூ.2ஆயிரம் அபராதமும், மேலும் புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயணன் சாலையில் 3 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் நூதன தண்டனை வழங்க போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.

போக்குவரத்தை சீர் செய்தனர்

இதையடுத்து 3 மாணவர்களும் புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசாருடன் இணைந்து தினமும் 2 மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடாது. அதே நேரம் இது போன்ற தவறுகளையும் உணர்ந்து சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காக துணை கமிஷனரால் வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பஸ்சை வழிமறித்து நடனமாடி வீடியோ எடுத்த தங்கள் செயல் தவறானது என அவர்கள் 3 பேரும் கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்