வேப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வேப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-07-13 18:45 GMT

ராமநத்தம், 

போக்குவரத்துக்கு இடையூறு

வேப்பூரில் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு, கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் சிலர் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் கடைகளை அகற்றவில்லை.

முற்றுகை

இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்குவதாக உறுதியளித்தனர். இதையேற்ற வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்