கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-27 20:23 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள நமையூர் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை அமைச்சர் சிவசங்கர், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கால்நடை மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு, மக்களை தேடி கால்நடை மருத்துவமனை வர வேண்டும் என்ற ஏற்பாட்டினை செய்தார். தற்போது கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 100 மாடுகளுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனையின் அடிப்படையில் இன்று சினையூட்டும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு என்று பிரத்யேக வசதியுடன் கூடிய அவசர கால ஊர்தி இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாகனம் என 4 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கான அவசர ஊர்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பால்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம், பால்வளத்துறை மற்றும் கிருஷி கால்நடை தீவன நிறுவனம் மூலம் 100 விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருட்கள் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். மேலும் பால்வளத்துறை சார்பில் முருக்கன்குடி பால் உற்பத்தியாளர்கள் கடன் சங்கத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் 15 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளையும், கூத்தூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கத்திற்கு பதிவு சான்றிதழையும் அமைச்சர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்