நசியனூரில் கால்நடை மருத்துவ முகாம்: சிறந்த மாடுகளை வளர்த்த விவசாயிகளுக்கு விருது- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

நசியனூரில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் சிறந்த மாடுகளை வளர்த்த விவசாயிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விருது வழங்கினார்.

Update: 2023-06-27 20:52 GMT

பவானி

நசியனூரில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் சிறந்த மாடுகளை வளர்த்த விவசாயிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விருது வழங்கினார்.

கால்நடை மருத்துவ முகாம்

நசியனூர் அருகே உள்ள என்.தயிர்பாளையத்தில் நேற்று கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. பால்வளத்துறை இயக்குனர் சு.வினீத் முகாமுக்கு தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முகாமை தொடங்கிவைத்தார்.

மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வு மேம்பாட்டுக்காக இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார்.

தரமான பால்

பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்ைத உயர்த்திடவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான பால் குறைந்த விலையில் கிடைத்திடவும் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கைமுறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகளுக்கு விருது

முன்னதாக அமைச்சர் மனோதங்கராஜ் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய்க்கான தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார்.

மேலும் 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மை விருதுகளையும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கிடாரி கன்றுகளுக்கான விருதுகளையும், மற்ற விவசாயிகளுக்கு விதை கரணை, ஆதார விதை, 2 விவசாயிகளுக்கு தீவன மக்காச்சோளம், 2 விவசாயிகளுக்கு மறுகாம்பு தீவன சோள விதையையும் வழங்கினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி பொதுமேலாளர் (ஆவின்) பேபி, கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், துணைபொதுமேலாளர் (பால்வளம்) ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பிரசிள்ளாமாலினி, மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் சுப்பிரமணியம் (2-ம் மண்டலம்), குறிஞ்சி.என்.தண்டபாணி (4-ம் மண்டலம்) மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், அரசுஅலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்