நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். கால்நடை கண்காட்சியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார். சிறந்த கால்நடை வளர்போருக்கான பரிசுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் வழங்கினர். கால்நடை வளர்போருக்கான இடுபொருட்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வசெங்குட்டுவன் ஆகியோர் வழங்கினர். முன்னதாக ஆவின் பொது மேலாளர் சத்யா வரவேற்றார். முகாமில் கால்நடை வளர்ப்போர் 186 பேர் கலந்து கொண்டனர். இதில் உதவி இயக்குனர் அசன் இப்ராகிம், கால்நடை டாக்டர் கணேசன், திருப்புகலூர் கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.