அம்மாபேட்டை பகுதியில் துணிகரம்: பட்டப்பகலில் ஆடு திருடும் மர்ம கும்பல்; சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

அம்மாபேட்டை பகுதியில் பட்டப்பகலில் துணிகரமாக ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-10-07 20:51 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பகுதியில் பட்டப்பகலில் துணிகரமாக ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆடு திருட்டு

அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, செம்படாபாளையம், கல்பாவி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பட்டப்பகலில் ஆடுகள் திருட்டு போவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாபேட்டை மற்றும் பவானி போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் செம்படாபாளையத்தை சேர்ந்த அழகு என்பவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்று திடீரென மாயம் ஆனது. அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. உடனே அவர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

கண்காணிப்பு கேமரா

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செம்படாபாளையத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் மோட் டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் ஓட்டி செல்ல மற்றொருவர் பின்னால் உட்கார்ந்தபடி ஆடு ஒன்றை பிடித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மொபட்டில் சென்றவர்கள் தான் ஆடுகளை திருடி சென்றனர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில்...

இதனிடையே ஆட்டை மர்ம நபர்கள் மொபட்டில் திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'வங்கியில் அல்லது தனியாரிடம் கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஆடுகளை வளர்த்து வருகிறோம். ஆனால் திருடர்கள் அந்த ஆடுகளை லாவகமாக தூக்கி இரு சக்கர வாகனங்களில் வைத்து திருடி சென்றுவிடுகிறார்கள். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆடு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்