வெண்ணந்தூர் அருகே திருமணிமுத்தாற்றில் மாசு கலந்த தண்ணீரால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் கவலை

வெண்ணந்தூர் அருகே திருமணிமுத்தாற்றில் மாசு கலந்த தண்ணீரால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் கவலை;

Update:2022-10-13 00:15 IST

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே உள்ள மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாற்றில் வரும் தண்ணீர் மாசு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாசு கலந்த நீர்

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் மழை நீரானது திருமணிமுத்தாறு வழியாக கொண்டலாம்பட்டி, பூலாவரி, மின்னக்கல் ஏரிக்கு வருகிறது. அங்கிருந்து கட்டிப்பாளையம் போன்ற ஏரிகள் நிரம்பி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள மதியம்பட்டி வழியாக சென்று பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

தற்போது சேலம் பகுதியில் இருந்து வரும் தண்ணீரானது கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் அதில் ஆகாயத்தாமரை படர்ந்து கழிவுகளும், சாயக்கழிவுகளும் கலந்து கருப்பு நிறமாக அதிக துர்நாற்றத்துடன் மாசடைந்து திருமணிமுத்தாற்றில் வருகிறது. இதனால் மதியம்பட்டி, கல்கட்டானூர், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் கவலை

இப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருக்கும் தண்ணீரை ஆடு, மாடுகள் கூட குடிப்பது இல்லை. மேலும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாகவும் தண்ணீர் இல்லை. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மதியம்பட்டி தரைபாலத்தில் நுரைகள் தேங்குவதும், அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டும் வந்தது. தற்போது மேம்பாலம் கட்டப்பட்டு விட்டதால், போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் மாசு கலந்த நீரால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சாயக்கழிவுகள்

இதுகுறித்து விவசாயி மகாலிங்கம் கூறியதாவது:- எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணிமுத்தாற்றில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு நல்ல நிலையில் இருந்தது. அப்போது விவசாயமும் நன்கு செழித்து இருந்தது.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சேலம் பகுதியில் அதிக அளவு சாயக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் அங்கிருந்து வரும் தண்ணீர் முற்றிலும் மாசு ஏற்பட்டு நுங்கும், நுரையுமாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் எங்கள் பகுதியில் விளையும் நெல், கரும்பு, தென்னை போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயம் பாதிப்பு

இதுகுறித்து மின்னக்கல்லை சேர்ந்த விவசாயி வேலாயுதம் கூறியதாவது:- எங்கள் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. எனக்கு தெரிந்த அளவில் அனைத்து விவசாய பயிர்களும் நன்கு வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ரசாயன கலவைகள் தண்ணீரில் கலப்பதினால் கடலை, சோளம், வெங்காயம் போன்ற பயிர்கள் எங்கள் பகுதியில் வருவது இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் இதுகுறித்து எந்த அதிகாரிகளும் செவி சாய்ப்பது இல்லை. கண் துடைப்புக்காக எங்கள் பகுதியில் வந்து பார்த்து விட்டு செல்வார்கள். அத்துடன் சரி மேல் நடவடிக்கை எதுவும் இருக்காது. நாங்கள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதினால் பல தோல் வியாதிகள் வருகிறது. மேலும் சுத்தமான குடிநீர் வேண்டு விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கின்றோம். மேலும் மாடுகளுக்கு இந்த தண்ணீரை கொடுப்பதினால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து, அடிக்கடி உடல்நிலை கேட்டு விடுகின்றது. எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்