வெண்டைக்காய் சாகுபடி பணிகள் தீவிரம்

Update: 2022-09-13 17:34 GMT


குடிமங்கலம் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

வெண்டைக்காய் சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நிரந்தர வருமானம், சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுதல், மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர். தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறைந்த கால பயிர்களை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். தற்போது குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி, மிளகாய் போன்று சந்தையில் அதிகஅளவு விற்பனை ஆகக்கூடிய பயிராக வெண்டைக்காயும் உள்ளது. மேலும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளில் அதிகளவு பயன்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது.

விவசாயிகள் தற்போது தனிப்பயிராக வெண்டைக்காய் பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் பெற்று வருகின்றனர்.

அதிக லாபம்

வெண்டைக்காய் சாகுபடி முறை குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

வெண்டைக்காயை அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. நாட்டுக்காய் 120 நாட்கள் மகசூல் கொடுக்கும். வீரிய ரக வெண்டைக்காய் 80 நாட்கள் மட்டுமே மகசூல் கொடுக்கும். நாட்டுரக வெண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் அதிகமான எடை இருக்கும். நாட்டு ரக வெண்டைக்காய்களில் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும், விதைத்த நாற்பதாம் நாள் முதல் காய்கள் பறிப்பதற்கு தயாராகிவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிக்கலாம் அரை ஏக்கர் நிலத்தில் முதல் படிப்பாக 10 கிலோ அடுத்தபடியாக 25 கிலோ அதற்கடுத்தபடியாக 60 கிலோ என மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். மொத்தம் அறுபது பறிப்புகள் வெண்டைக்காய்கள் பறிக்கலாம்.

நாட்டு ரக வெண்டைக்காய் பறிப்புக்கு வந்ததில் இருந்து 120 நாட்கள் வரைக்கும் காய்ப்பு இருக்கும். ஒரு கிலோ குறைந்தபட்சம் சராசரியாக 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் தொழிலாக உள்ளது.

மேலும் செய்திகள்