வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.1 கோடியே 6 லட்சத்தில் 2 கூடுதல் பள்ளி வகுப்பறைகள், நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம், ரூ.40 கோடியே 78 லட்சத்தில் 67 மழைநீர் வடிகால்வாய்கள், ரூ.7 கோடியே 94 லட்சத்தில் 71 சாலைகள் மேம்படுத்தும் பணி உள்பட ரூ.50 கோடியே 85 லட்சத்துக்கான பணிகள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இந்த பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பூங்கொடி, துர்காதேவி, தேவி, செல்வேந்திரன், சாலமோன், பாரதி, சுதா பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் நிலையத்தை நீடித்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி நிதி ஒதுக்கி அறிவித்தார். 3 கி.மீ. தூரத்தில் 2.4 கி.மீ. தூரம் தூண்கள் அமைத்து பணிகள் முடிந்து விட்டது. 600 மீட்டர் தூரம் பணியை கடந்த 10 ஆண்டுகளாக செய்யாமல் கிடப்பில் வைத்திருந்தார்கள். தற்போது அந்த பணி விரைவாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பறக்கும் ரெயில் பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.