திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்தனர். அப்போது கையில் 4 அடி சூலாயுதத்தை ஏந்தி வந்த நபர், 'நான் கடவுள், உலகத்தை காக்க வந்துள்ளேன்' என்று சத்தம் போட்டபடி மனு கொடுக்கும் இடத்துக்கு வந்தார். தலையில் தொப்பி, பேண்ட், சட்டை அணிந்திருந்தார்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 48) என்பது தெரியவந்தது. முரண்பாடாக பேசியதால் போலீசார் லாவகமாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாசலில் போலீசார் மனு கொடுக்க வரும் மக்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இருப்பினும் இரும்பு சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.