பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகும் வாகனங்கள்
விழுப்புரம் நகராட்சியில் பயன்பாட்டுக்கு வராமலேயே குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வீணாகிறது. அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம்,:
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை அவ்வப்போது தூய்மைப்பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். 3 சக்கர தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள் விரைவாக நடைபெறவில்லை.
இதையடுத்து குப்பைகளை சேகரிக்க ஏதுவாக நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலமாக ஒரு வார்டுக்கு ஒரு வாகனம் என்ற வீதத்தில் 42 வார்டுகளுக்கும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய 42 வாகனங்கள் வாங்கப்பட்டன.
வீணாகிறது
இந்த வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதங்கள் ஆகியும் இன்னும் அவை பயன்பாட்டுக்கு வராமல் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உள்ள பேட்டரிகளுக்கு அவ்வப்போது சார்ஜ் போடப்பட்டு பயன்படுத்தினால்தான் அதன் பேட்டரிகள் நீண்ட நாள் உழைக்கும்.
ஆனால் தற்போது ஒரு மாத காலமாக நகராட்சி அலுவலக வளாகத்திலேயே அந்த வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. இதனால் வாகனங்களில் உள்ள பேட்டரிகள் வீணாகுவதோடு மட்டுமின்றி வாகனங்களும் வீணாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர...
தற்போது ஒரு மாத காலமாக பயன்பாடின்றி இருந்து வருவதால் அதன் பேட்டரிகளின் தன்மை எப்படி இருக்குமோ, வாகனங்கள் சீரான முறையில் இயங்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே இந்த வாகனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, விழுப்புரம் நகராட்சியில் ஏற்கனவே தூய்மைப்பணி மேற்கொண்டு வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்கு பதிலாக தற்போது வேறொரு தனியார் நிறுவனம் தூய்மைப்பணி மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு இன்னும் முழு பொறுப்புகளும் ஒப்படைக்காததால் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விரைவில் அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.