கட்டணத்தை தவிர்க்க விமான நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்
கட்டணம் செலுத்துவதை தவிர்க்க விமான நிலையம் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் ஏராளமான பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதும், திருச்சியில் இருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அழைத்து செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, விமான நிலைய நுழைவு வாயிலில் உள்ள கட்டண வசூல் மையத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்பு, வாகன நிறுத்தத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால் பயணிகளை அழைத்து செல்வதற்காக கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களில் பலர், திருச்சி விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் அருகில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். பயணி விமான முனையத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, டிரைவர்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தவுடன் வாகனங்களை உள்ளே எடுத்துச் சென்று பயணிகளை ஏற்றி வெளியே வருகின்றனர். இது குறித்து வெளியில் வாகனங்களை நிறுத்திய டிரைவர்களிடம் கேட்டபோது, விமான நிலையத்தில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும், குறைந்த வாடகையில் வாகனங்களை ஓட்டி வருவதாகவும், அதில் குறிப்பிட்ட தொகை கட்டண வசூல் மையத்தில் செலுத்த வேண்டியிருப்பதால் வாகனங்களை வெளியில் நிறுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும், தெரிவித்தனர். மேலும் இதனை சீர் செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.