ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள்

லெட்சுமாங்குடியில், ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-11 18:45 GMT

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடியில், ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லெட்சுமாங்குடி சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை, மன்னார்குடி, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, சென்னை போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. அதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

இந்த நிலையில், லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மிகவும் குறுகலான சாலையாக உள்ளது. இதனால் அந்த சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நோயாளிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், கடைவீதி சென்று வருவோர் என அனைத்து தரப்பினரும் பாதிப்பு அடைந்து வந்தனர்.

ஒரு வழிப்பாதை

அதனால், லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு வழி பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழி பாதை ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, திருவாரூரில் இருந்து வரும் வாகனங்கள் லெட்சுமாங்குடி ஏ.ஆர். ரோடு, அரசு ஆஸ்பத்திரி வழியாக லெட்சுமாங்குடி பாலத்தை கடந்து மன்னார்குடி செல்லும் வகையிலும், அதேபோல மன்னார்குடி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடைவீதி சாலை வழியாகவும் செல்லும் வகையில் ஒரு வழி பாதை ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

விதிகளை மீறி..

இதனால், தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை ஒரு வழி பாதையில் செல்லும் வகையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்வது இல்லை.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், போக்குவரத்து போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். எனவே, விதிகளை மீறி ஒரு வழி பாதையில் செல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு வழி பாதையிலேயே செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்