பொள்ளாச்சியில் வாகன சோதனை: 15 மொபட்டுகள் திருடிய ஆசாமி கைது
பொள்ளாச்சியில் நடந்த வாகன சோதனையில் 15 மொபட்டுகள் திருடிய ஆசாமிைய போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த வாகன சோதனையில் 15 மொபட்டுகள் திருடிய ஆசாமிைய போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி இருசக்கர வாகன அதிக அளவில் காணாமல் போனது. இந்தநிலையில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற நபர்களை பிடிக்க கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் நபர்களை பிடிக்க பொள்ளாச்சி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
15 மொபட்டுகள் மீட்பு
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரனாக பேசியதால் போலீசார் அந்த நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை சோதனை செய்தபோது அந்த நம்பர் போலியானது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர், கோவை, காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திகுமார் (வயது 41) என்பதும், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சக்திகுமாரை கைது செய்ததோடு அவர் திருடிச்சென்றதாக 15 மொபட்டுகளை மீட்டனர்.