வேதாரண்யத்தில் அரியாண்டி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேதாரண்யத்தில் அரியாண்டி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

Update: 2022-07-25 17:13 GMT

வேதாரண்யம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேதாரண்யத்தில் அரியாண்டி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

அரியாண்டி குளம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் முன்பு 11.5 எக்டேர் பரப்பளவில் இருந்தது. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தில் பரப்பரளவு குறைந்துள்ளது.

குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளித்தது. இதனால் குளத்தின் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குளத்தில் கொசுகள் உற்பத்தியாக தொற்று நோய் பரவும் அபாயம் இருந்தது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. வேதாரண்யம் பகுதியில் பல குளங்கள் காணவில்லை என்று பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து 18 குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்

இதை தொடர்ந்து இருந்த இடம் தெரியாமல் இருந்த அரியாண்டி குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணி 30 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத்தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம்,வார்டு கவுன்சிலர் திருக்குமரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. குளம் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும், குளத்தின் தென்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது எனவும் நகராட்சிஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.இதை தொடர்ந்து குளத்தில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்