வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்தநாள் விழா:விதிகளை மீறிய 286 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு
வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்தநாள் விழாவின்போது விதிகளை மீறிய 286 வாகன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே உள்ள கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில், அவரது 313-வது பிறந்த நாள் விழா கடந்த 11-ந் தேதி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் செல்வதற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தடையை மீறி பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், 108 ஆம்புலன்சு வாகனங்களுக்கு வழிவிடாமலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 45 மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்கள் மீது 110 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும், 65 நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் மீது 150 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தவிர 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேற்படி வழக்குகளில் தேவைப்படும் பட்சத்தில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.