தோலம்பதி கிராமத்தில் வேடப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் மீது நடந்து ஆசி வழங்கிய பூசாரி

தோலம்பதி கிராமத்தில் வேடப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில்பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி வழங்கினார்.

Update: 2023-07-13 18:30 GMT

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகில் உள்ள தோலம்பதி கிராமத்தில் வேடப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாளில் விநாயகருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 2-வது நாளில் பட்டாளம்மனுக்கு பட்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு பெண்கள், குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரையில் படுத்து கொண்டனர். அப்போது பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கினார்.

இதன்மூலம் பக்தர்களுக்கு பிடித்திருந்த பேய் பிசாசு ஓடிவிடும் எனவும், குழந்தை பாக்கியம், திருமணம் கைகூடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இந்த வழிபாட்டை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தலும், நாளை(சனிக்கிழமை) எருது விடும் விழாவும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முனியப்பனுக்கு முப்பூஜை நடத்தப்பட்டு விழா நிைறவு பெறுகிறது.

மேலும் செய்திகள்