குள்ளஞ்சாவடி அருகே, கட்சி கொடி ஏற்ற எதிர்ப்பு: வி.சி.க.- பா.ம.க. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
குள்ளஞ்சாவடி அருகே, கட்சி கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை தொடா்பாக வி.சி.க.- பா.ம.க.கட்சியினா் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 60 அடி உயர கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வி.சி.க. -பா.ம.க. நிர்வாகிகளை சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு கோட்டாட்சியர் அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தாசில்தார் பூபாலச்சந்திரன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், துணை மேயருமான தாமரைச்செல்வன், மாவட்ட செய லாளர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாயவன், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன், மாநில மாணவர் அணி செயலாளர் கோபிநாத், ஒன்றிய செயலாளர் சகாதேவன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருக்குமாறு கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.