வாசுதேவநல்லூர் இரட்டைக்கொலை வழக்கு: பிளஸ்-2 மாணவர் கைது
வாசுதேவநல்லூர் இரட்டைக்கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (வயது 55), செல்லத்துரை (53). இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே ஏற்கனவே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பான வழக்கு வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அய்யப்பன் செல்லத்துரை வீட்டின் அருகே சென்றபோது எச்சில் துப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யப்பனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேேய துடிதுடித்து இறந்தார். இதுபற்றி அறிந்த அய்யப்பனின் மகன் 17 வயது சிறுவன் கத்தியால் செல்லத்துரையை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரை பலத்த காயம் அடைந்து இறந்தார்.
இந்த இரட்டைக்கொலை குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அய்யப்பன், செல்லத்துரை ஆகியோரது உடல்கள் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் கொலை தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சிறுவன் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.