ரூ.54.35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்

ஆலங்குடி ஊராட்சியில் ரூ.54.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-09 18:45 GMT

குத்தாலம்:

ஆலங்குடி ஊராட்சியில் ரூ.54.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் குருங்காடு அமைத்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த கலெக்டர் உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு

அதனை தொடர்ந்து பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் செலவில் மயிலம் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

முன்னதாக ஆலங்குடி பள்ளியில் உள்ள சமையல் கூடத்தினை பார்வையிட்ட கலெக்டர் அங்கு செய்யப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி மற்றும் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதாவைத்தியநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ஆய்வு

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு வந்த கலெக்டரை பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணைத்தலைவர் அன்பு செழியன் ஆகியோர் வரவேற்றனர். வைத்தீஸ்வரன் கோவில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழைநீர் வடிகால் வசதி, குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு அமைத்திட போதிய இட வசதி ஆகியவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டர் இதுகுறித்து தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து மன்ற கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீர்காழி தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரிடம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்