கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் பேரையூர் கோர்ட்டில் ஆஜர்
கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பேரையூர்
கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வரிச்சியூர் செல்வம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன் (வயது 42). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வீட்டை விட்டுச் சென்றவர் திரும்பி வரவில்லை என்று இவரது மனைவி சுகந்தா, வில்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வரிச்சியூர் செல்வம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புவனேஸ்வரனையும் கொன்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கார் டிரைவர்
வரிச்சியூர் செல்வத்தின் உறவினர் வில்லூரை சேர்ந்தவர். அவர் மூலமாக கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன் வரிச்சியூர் செல்வத்திடம் கார் டிரைவராக வேலையில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் போலீசாரின் என்கவுண்ட்டர் ஒன்றில் கேரளாவை சேர்ந்த ஒருவன் பலியானான். அவன் இறந்ததற்கு நீ தான் காரணம், அதனால் இறந்தவன் குடும்பத்துக்கு நீ தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று புவனேஸ்வரன் வரிச்சியூர் செல்வத்தை மிரட்டி உள்ளான். இதனால் வரிச்சியூர் செல்வம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து புவனேஸ்வரன், வரிச்சியூர் செல்வத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வரிச்சியூர் செல்வம் புவனேஸ்வரனை தீர்த்துகட்ட முடிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் பாண்டியாபுரம் செக்போஸ்ட் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அங்கு வந்த புவனேஸ்வரனை கார் ஒன்றில் வரிச்சியூர் செல்வம் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புவனேஸ்வரனை காரில் இருந்து இறங்க செய்து காரை விட்டு உடலில் ஏற்றி கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
புவனேஸ்வரன் கொலை சம்பந்தமாக சிறையில் இருந்த வரிச்சியூர் செல்வத்தை வில்லூர் போலீசார் அழைத்து பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வரிச்சியூர் செல்வத்தை அக்டோபர் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.