வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை வழக்கு: முன்ஜாமீன் கோரியவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை- மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதம்

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Update: 2023-08-03 21:20 GMT


வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர், தனது மனைவி, குழந்தைகளுடன் மதுரையில் வசித்தார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாகவும் இருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மதுரை டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், அவருடைய நண்பர் முனியசாமி ஆகிய 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து வரிச்சியூர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் செந்தில்குமார் சென்னை சென்றார். அங்கு இருந்து செந்தில்குமார் திடீரென மாயமானதாகவும் அவரை கண்டுபிடிக்கக்கோரியும் அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனால், வரிச்சியூர் செல்வம் ஏவியதன் பேரில் சிலர் சேர்ந்து செந்தில்குமாரை சென்னையில் சுட்டுக் கொன்று, அவரது உடலை துண்டுகளாக்கி நெல்லை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. எனவே வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

முன்ஜாமீன் கோரி மனு

செந்தில்குமார் கொலை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த ஈசுவரன் உள்ளிட்ட சிலர் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஈசுவரன் உள்பட 2 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் நம்பி செல்வன் ஆஜராகி, "மனுதாரர்கள் சேர்ந்துதான் செந்தில்குமாரை சென்னையில் கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக்கி காரில் எடுத்து வந்து தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர். அங்கு செந்தில்குமாரின் உடைமைகளை போலீசார் கண்டறிந்தனர். அதை அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிக தீவிரமானவை. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்" என்று வாதாடினார்.

ஆனால் இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பு வாதத்துக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்களது வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்