பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி - மதுரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சியை மதுரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

Update: 2023-02-27 20:56 GMT


பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சியை மதுரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

செல்பி எடுக்கும் நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு கோடி பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஜான்சி ராணி பூங்கா அருகே நடந்த இந்த நிகழ்ச்சியில், பா.ஜனதாவின் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர், அங்கும் பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர், பெண்கள் மத்தியில் பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்களால் ஏராளமானவர்கள் பயன் அடைந்துள்ளனர். அவர்களில் பெண்கள் 1 கோடி பேருடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடக்கிறது.

தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

2 கோடி வீடுகள்

பிரதம மந்திரியின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புறங்களில் சுமார் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 85 சதவீதம் பெண்கள் பெயரில்தான் கட்டப்பட்டுள்ளன.

இதனால், பெண்களின் மதிப்பு ஆண்களிடத்தில் உயர்ந்துள்ளது. கணவன்- மனைவி பிரச்சினையில் கூட பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதுபோல், முத்ரா கடன் திட்டத்தில் பயன் அடைந்தவர்களில் 65 சதவீதம்பேர் பெண்கள், இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 9 கோடி பெண்கள் பயன் பெற்றுள்ளனர். வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 48 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். அதிலும் 55 சதவீதம் பேர் பெண்கள்தான். இதுபோன்று, எல்லா திட்டங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக மோடி தலைமையிலான பா.ஜ.க. உள்ளது. பெண் குழந்தைகள் எங்கள் குடும்பத்தில் பெருமை என சொல்லும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் அணி நிர்வாகிகள், பயனாளி பெண்களுடன் செல்பி எடுத்து, நமோ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த நமோ செயலியில் பிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அந்த செயலியில் எந்த திட்டத்தில் எந்த பயனாளி பயன் பெற்றுள்ளார் என்ற விவரம் பதிவு செய்யப்படும். மோடியின் திட்டங்களால் பயன்பெற்றவர்களின் விவரம் அவர்களின் ஒப்புதலின்பேரில் அந்த செயலியில் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 20 ஆயிரம் பெண்களுடன் செல்பி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் அந்த 1 கோடி என்ற இலக்கை எட்டிவிடுவோம்.

பொருளாதார வீழ்ச்சி

பக்கத்து நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா பசி, பட்டினி இல்லாத நாடாக இருக்கிறது. உலகத்தில் முன்னேறி கொண்டிருக்கிற நாடாகவும், 5-வது மிகப்பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடாகவும் இருக்கிறது. பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கிறார். இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து மதுரையின் பல இடங்களில் வானதி சீனிவாசன் பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில தலைவி உமாரதி, மாநில பொது செயலாளர் சீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்