காதலர் தினம்: சென்னையில் முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு
காதலர் தினம் என்பதே கலாசார சீர்கேடு என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.;
சென்னை,
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா, எலியட்ஸ், பாலவாக்கம் கடற்கரைகள், மாமல்லபுரம், பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் காதலர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க காதலர் தினம் என்பதே கலாசார சீர்கேடு என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மேலும் சிலர் 'காதலர் தின எதிர்ப்பு' என்ற பெயரில் அவர்களை மறைமுகமாக புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டவும் செய்கிறார்கள். அவ்வாறு யாராவது மிரட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.