வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் புதிதாக 101 அடி உயரத்தில் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-10 19:52 GMT

உசிலம்பட்டி,

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் புதிதாக 101 அடி உயரத்தில் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அங்காள ஈஸ்வரி கோவில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர்.இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து 101 அடி உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கோவிலில் யாக சாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆதிவழக்கப்படி அக்கா மகன்கள் சீர் கொண்டு வந்தனர். அதன் பின்னர் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

கும்பாபிஷேகம்

இதை தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த புனித தீர்த்தக்குடங்கள் நேற்று காலை கோவிலை சுற்றி ஊர்வலமாக சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர். அதன்பின்னர் கோவில் ராஜகோபுரத்துக்கு புனித தீர்த்தக்குடங்களை கொண்டு சென்றனர்.

அதன்பின்னர் காலை 9.40 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தக்குடங்களை ராஜகோபுர கலசம் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். அதன்பின்னர் அங்காள ஈஸ்வரிக்கும், வாலகுருநாதசுவாமியும் மகா அபிஷேகம் நடந்தது.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் கலந்த மலர்களை ராஜகோபுரம் மீது தூவும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பூசாரி குருவப்ப நாயுடு, வசவன் நாயக்கர்கள், ஆரியபட்டி சின்னிவீரத்தேவர் வகையறா, சொக்கத்தேவன்பட்டி கட்டகிடாத்தேவர் வகையறா, சக்கிலியன்குளம் வெள்ளாண்டித் தேவர் வகையறா, ஆ.கன்னியம்பட்டி சின்னகாமத்தேவர் வகையறா, ஏழு பள்ளைய ராஜாக்கள், நாட்டாமங்கலம் அக்கா மகன் சர்க்கரை வகையறா, காடுபட்டி அதிவீரத்தேவர் வகையறா, சூடன்புளியங்குளம் அக்கா மகன்கள் சூடாத்தேவர் வகையறா என சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அங்காள ஈஸ்வரியை வழிபட்டனர்.

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

இந்த விழாவில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர்கள் மா.தவச்செல்வம், மா.காந்திராஜன் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இவர்களின் குடும்பத்தார் சார்பில் விழாவில் கலந்து கொண்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்