வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-16 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நினைவு தினம்

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 223-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கயத்தாறில் அவரது மணிமண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் வெண்கல சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் அவரது மகன் துரை வைகோ மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமாள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ் சென்னகேசன், ஓ.பி.சி. மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் ராஜசெல்வம் ஆகியோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசாமி, பொருளாளர் செண்பகராஜ், அய்யாசாமி, வழக்கறிஞர் விஜய் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அன்னதானம்

நினைவு நாளை முன்னிட்டு கயத்தாறு அகிலாண்டம்மன் கோவிலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். பின்னர் வைகோ பேசுகையில், "தமிழக அரசு விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தல வரலாற்றை இளைய சமூகத்தினர் பின்பற்றி மக்கள் பணியில் தொண்டு செய்ய வேண்டும். கயத்தாறில் கட்டபொம்மனை அடைத்து வைத்த இடத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறில் பீரங்கி மேடு உள்ளது. அதில் வைத்து தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தீர்ப்பு வழங்கிய இடமாகும். அதன் ஞாபகர்த்தமாக நினைவு தூண் அமைக்க வழிவகை செய்யப்படும்" என்றார்.

தூக்கிலிடப்பட்ட இடத்தில் மரியாதை

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநிலச் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில தலைவர் வரதராஜன், மாநில கவுரவ தலைவர் பேராசிரியர் சங்கரவேலு, மாநில பொருளாளர் பாண்டியன் ஆகியோர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவரது சிலை முன்பு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில இளைஞரணி செயலாளர் பூபாண்டி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் பழனி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் அய்யாசாமி ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பா.ஜனதா கட்சியின் பாஞ்சாலங்குறிச்சி, மதுரை, தேனி, கம்பம், ராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி, நெல்லை பகுதி மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை தலைவர் செண்பகராஜ்குட்டி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக சிலைக்கு முன்பு உள்ள வீரசக்கதேவி கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இளைஞர்கள், சிலம்பாட்டம், வாள்வீச்சு, ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

பாஞ்சாலங்குறிச்சி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் உள்ள வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச்சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் தலைமையில் வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வீரசக்கதேவி ஆலய குழு செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர், துணைத் தலைவர்கள் முருகேசன், வேல்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச்சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்