காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கந்தபுராணம் அரங்கேறிய புகழ்பெற்ற காஞ்சீபுரம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று அதிகாலை கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. வண்ண மலர் அலங்காரத்தில் முருகபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகாசி விசாக திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை, இரவு என் இரு வேளைகளில் முருகபெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்தவகையில் நேற்று இரவு ஆடு வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சூரியபிரபை, இரவு அன்ன வாகனம், நாளை காலை தேவேந்திர மயில் வாகனம், இரவு பூத வாகனம், 27-ந்தேதி காலை நாக வாகனம், இரவு யானை வாகனம், 28-ந்தேதி காலை பல்லக்கு, இரவு சந்திர பிரபை, 29-ந் தேதி காலை கண்ணாடி விமானம், இரவு புலி வாகனம், மே 30 -ந்தேதி காலை தேர் திருவிழா, இந்த மாதம் 31-ந்தேதி காலை மான் வாகனம், இரவு குதிரை வாகனம், ஜூன் 1-ந்தேதி காலை பல்லக்கு, இரவு மாவடி சேவை, 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், இரவு கேடயம் மங்களகிரி, ஜூன் 3-ந் தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, இரவு சூரன் மயில் வாகனம், 4-ந் தேதி காலை, இரவு கேடயம் மங்களகிரி உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.