வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி விலை உயர்வு

பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரித்ததால் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ.190-ம், கத்தரிக்காய் ரூ.110 வரையும் உச்சபச்சமாக உயர்ந்துள்ளது.

Update: 2023-01-13 22:53 GMT

நாகா்கோவில்:

பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரித்ததால் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ.190-ம், கத்தரிக்காய் ரூ.110 வரையும் உச்சபச்சமாக உயர்ந்துள்ளது.

கனகமூலம் சந்தை

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் தினமும் 10-க்கும் அதிகமான டெம்போக்களில் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கனகமூலம் சந்தையில் பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

முக்கியமாக வெண்டைக்காய் விலை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வாரம் ரூ.45-க்கு விற்பனை ஆன வெண்டைக்காய் நேற்று ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ முருங்கைக்காய் கடந்த வாரம் கிடு கிடுவென உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது ரூ.10 குறைந்து ரூ.190-க்கு விற்பனை ஆனது. இதே போல ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ் ரூ.90-க்கு விற்கப்பட்டது.

இதுபற்றி சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "பொங்கல் பண்டிகை காரணமாக காய்கறிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றார் போல காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கியமாக முருங்கைக்காய் நெல்லை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக வருகிறது. கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால் முருங்கைக்காய் விளைச்சல் வரத்தும் குறைந்துவிட்டது" என்றார்.

காய்கறி விலை நிலவரம்

வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-

நாட்டு கத்தரிக்காய்-ரூ.100 முதல் ரூ.110 வரை, கேரட்-ரூ.66, முட்டைக்கோஸ்-ரூ.36, சேனைக்கிழங்கு-ரூ.46, பீட்ரூட்-ரூ.50, இஞ்சி-ரூ.80, புடலங்காய்-ரூ.40, சுரக்காய்-ரூ.35, பூசணிக்காய்-ரூ.10, சவ்சவ்-ரூ.30, முள்ளங்கி-ரூ.40, தக்காளி-ரூ.20, உருளைகிழங்கு-ரூ.40 முதல் ரூ.70 வரை, பல்லாரி-ரூ.36, சின்னவெங்காயம்-ரூ.100 முதல் ரூ.120 வரை, பாகற்காய்-ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வாழை குலைகள்

இது ஒருபுறம் இருக்க அப்டா மார்க்கெட்டுக்கு வாழை குலைகள் வரத்தும் குறைந்துள்ளது. அப்டா மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் வாழை குலைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தேதிகளில் ஏலம் நடக்கும்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை என்பதால் வாழைக்குலைகள் அதிகளவில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே வாழை குலைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வாழை குலைகள் அதிக விலைக்கு ஏலம் போனது. சிவப்பு வாழை குலை ரூ.1500 வரை விலை போனது. பேயன் வாழை குலை ரூ.400-க்கும் விற்கப்பட்டது. மேலும் ரசகதளி ஒரு கிலோ ரூ.50-க்கும், ஏத்தன் ரூ.42-க்கும், மட்டி ரூ.60-க்கும் விற்கப்பட்டது. வியாபாரிகள் வாழை தோப்புக்கே நேரடியாக சென்று வாழைகளை வாங்கி செல்வதால் மார்க்கெட்டுக்கு வாழைகள் குறைவான அளவு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்