வடபாதிமங்கலம் பஸ் நிலைய சாலையை அகலப்படுத்த வேண்டும்

வடபாதிமங்கலம் பஸ் நிலைய சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2023-01-02 18:45 GMT

வடபாதிமங்கலம் பஸ் நிலைய சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடபாதிமங்கலம் பஸ்நிலையம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், விக்ரபாண்டியம், எட்டுக்குடி, கூத்தாநல்லூர் போன்ற முக்கிய ஊர்களுக்கும், ஏனைய கிராம பகுதிகளுக்கும் சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் ஏராளமான பஸ்கள் நிற்கக்கூடிய வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பஸ் எந்த இடத்தில் நிற்கிறது என்று தெரியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

குறுகலான சாலை

இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு வழிகளிலும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் மிகவும் சிரமத்துடன் வெளியே வருகிறது. ஆபத்தான வளைவுகளில் பஸ்கள் திரும்பும் போது வளைவுகளில் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

அகலப்படுத்த வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் சிரமம் இன்றி வருவதற்கு ஏதுவாக பஸ் நிலைய சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்