காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்-அகில பாரத மூத்த குடிமக்கள் வலியுறுத்தல்

காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-09-24 18:08 GMT

உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார். கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்கள் மறைவு அல்லது பதவி விலகல் போன்ற நிகழ்வுகளில் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்த்து கட்சி தலைமை மூலம் அந்த இடம் நிரப்பப்பட வேண்டும். இதனால் தேர்தல் செலவு மற்றும் வீண் சச்சரவுகள் குறையும். சுயேச்சை உறுப்பினர் இடம் காலி ஏற்படின் வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினருக்கு அடுத்தபடியாக வாக்கு பெற்ற கட்சியினரை கொண்டு அந்த இடம் நிரப்பப்படலாம். இதற்கு ஏற்ப தேர்தல் விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இம்முறையானது இலங்கை மற்றும் சில நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. கல்வித்துறையிலும், சில அரசு அலுவலகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1-1-2022 முதல் 30-6-2022 முடிய உள்ள காலத்திற்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கணபதி வரவேற்றார். முடிவில் நிர்வாகி மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்