குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவில் தேரை மூடி பாதுகாக்க வலியுறுத்தல்

குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவில் தேர் காற்று, மழையால் சேதமடைவதை தடுக்க தேரை மூடி பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-06 17:57 GMT

தேரோட்டம்

குளித்தலை டவுன்ஹால் தெருவில் பிரசித்தி பெற்ற நீலமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். பழமையான இந்த கோவில் தேர் பழுதடைந்த காரணத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. பின்னர் தேரோட்டத்தின்போது அந்த புதிய தேரிலேயே சுவாமி எழுந்தருளி தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையோரம் தேரோட்டம் முடிந்த பின்னர் தேர் நிறுத்தப்பட்டிருக்கும். மழை, வெயில், காற்று போன்றவை காரணமாக கோவில் தேர் எவ்வித அசுத்தம் மற்றும் சேதமடையாமல் இருப்பதற்காக தேரை சுற்றிலும் தகரத்தினால் மறைப்புகள் அமைக்கப்பட்டு தேர் மூடப்பட்டிருக்கும். தேரோட்டத்தின்போது மட்டும் தகரத்தினால் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.

சேதம் அடையும் சூழ்நிலை

நடப்பாண்டு இந்த கோவில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடந்தது. தேரோட்டம் முடிந்த பின்னர் வழக்கமாக தேர் நிறுத்தப்படும் இடத்திலேயே தேர் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் இக்கோவில் தேர் தற்போது வரை மூடி வைக்கப்படாமல் உள்ளது. குளித்தலை பகுதியில் தற்போது பலத்த காற்று வீசிவருகிறது. அதுபோல பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. இதன் காரணமாக மூடி வைக்கப்படாமல் உள்ள இக்கோவில் தேர் புழுதி காற்றால் மாசுபடுவதோடு, மழையில் நனைகின்றது.

தொடர்ந்து மழை மற்றும் காற்றால் இத்தேர் மாசுபட்டால் மரத்திலான இத்தேர் மழை நீரில் ஊறி சேதம் அடையும் சூழ்நிலை உள்ளது. எனவே நீலமேகப்பெருமாள் கோவில் தேரை பாதுகாக்கும் பொருட்டு, உடனடியாக தேரை சுற்றி தகரத்திலான தடுப்புகள் வைத்து மறைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்